சென்னை:தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சிக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தங்களை சந்தித்தவர்கள் ஆட்சி அதிகாரிகளாக அல்லாமல், தவெக கட்சி நிர்வாகிகளாகவே வந்ததாகவும் அவர் கூறினார். தற்போதைய அரசியல் சூழல், மத்திய அரசின் நாடாளுமன்ற ஜனநாயக மீறல்கள், இந்தியா கூட்டணியின் பொறுப்புகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தவெக அரசுடன் தாங்கள் கூட்டணியில் இல்லை என்றும், அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை என்றும் வீரபாண்டியன் திட்டவட்டமாக கூறினார். ஆளுநரின் அதிகார அத்துமீறலைத் தடுக்கும் நோக்கிலேயே வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
