திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலாவுக்காக கேரளா சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பனம்பிக்குன்னு சந்திப்பு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் நீண்ட நேரம் போராடி காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். காரின் பாகங்களை வெட்டி அகற்றியே உடல்களை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடல்கள் கடுமையாக சேதமடைந்ததால் அனைவரையும் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என்றும், இதுவரை சிலரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் போதிய எச்சரிக்கை வசதிகள் இல்லாததும், லாரி நிறுத்தப்பட்டிருந்த விதமும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
