புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டினார்.
அவர் கூறியதாவது:- தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் மிகவும் குறைந்திருப்பதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொடர் முயற்சிகளே முக்கிய காரணம். இந்த தேசிய சாதனைக்கு பங்களித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒட்டுமொத்த கல்வி முறையின் வலுவான அடித்தளமாக பள்ளிக் கல்வி திகழ்கிறது. மனித வாழ்க்கையில் அறிவையும் திறன்களையும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் குழந்தைப் பருவத்தில் கற்றுத்தரப்படும் நன்னடத்தை மற்றும் ஒழுக்கப் பாடங்கள் வாழ்நாள் முழுவதும் மனிதனுக்கு வழிகாட்டியாக அமையும்.
தொடக்கக் கல்வி நிலையிலேயே குழந்தைகளின் அறிவுசார், உடல்சார் மற்றும் ஒழுக்கசார் வளர்ச்சியில் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் எதிர்கால தலைமுறையினரை சிறந்த மாணவர்களாக மட்டுமல்லாமல், கடமையுணர்வும் பொறுப்புணர்வும் கொண்ட நல்ல இந்திய குடிமக்களாகவும் உருவாக்க முடியும்.
பல மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் இருந்து கல்வி கற்க வருகின்றனர். சிலர் தங்கள் குடும்பத்தில் முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களாக உள்ளனர். திறமை இருந்தபோதிலும், தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வது ஆசிரியர்களின் முக்கிய பொறுப்பாகும்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவை உலகின் சிறந்த திறன் மையமாகவும், அறிவு வல்லரசாகவும் உருவாக்குவது தேசிய முன்னுரிமையாக உள்ளது.
‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது. அந்த இலக்கை அடைய உலகத் தரம் வாய்ந்த கல்வி முறை அவசியம்.
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
