ஹைலாகண்டி: அசாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரெயில் தண்டவாளப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மிசோரம் மாநிலம் பைராபி செல்லும் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை மாலை பெய்த இடைவிடாத கனமழையைத் தொடர்ந்து, அசாம்–மிசோரம் எல்லைப் பகுதியில் ஜமீரா மற்றும் பைராபி இடையே உள்ள ரெயில் பாதையின் சுமார் 50 மீட்டர் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதி வழியாக ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வடகிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தேவையான கட்டுமானப் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். சேதமடைந்த தண்டவாளத்தை விரைவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வியாழக்கிழமை இயக்கப்பட்ட சில்சார்–பைராபி பயணிகள் ரெயில் ஜமீரா நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் இன்று ஜமீராவில் இருந்து திரும்பும் பயணத்தை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைராபி நோக்கிச் செல்லும் பயணிகளுக்காக மாற்று சாலை போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தி–சைராங் ரெயில் ஹைலாகண்டி வரை மட்டுமே இயக்கப்பட்டது. ஹைலாகண்டி–சைராங் இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பைராபி–சில்சார், சைராங்–கொல்கத்தா மற்றும் சில்சார்–சைராங் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிக்கித் தவிக்கும் பயணிகளுக்காக ஜமீரா, பைராபி மற்றும் சைராங் ரெயில் நிலையங்களில் குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கவுகாத்தி, லும்டிங், நஹர்லாகுன், படர்பூர் மற்றும் சைராங் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
