திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கூடப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரமே ரூ.12.54 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி–திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஏடிஎம் மையத்திற்கு நேற்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது அங்கு இருந்த ஏடிஎம் இயந்திரம் முழுவதுமாக மாயமாகியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் பூந்தமல்லி காவல் ஆணையர் மற்றும் வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
ஏடிஎம் மையத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 700 நிரப்பப்பட்டிருந்த நிலையில், மர்ம கும்பல் இயந்திரத்தையே கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் மர்ம நபர்கள் எப்படி ஏடிஎம் இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்? கொள்ளை நடைபெற்ற நேரம் எது? இதில் எத்தனை பேர் ஈடுபட்டனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் மூன்றாவது ஏடிஎம் கொள்ளை சம்பவம் இதுவாகும்.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே புதுப்பேடு பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரம் கேஸ் வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டு ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
