கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 22 வயது இளைஞர் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியாவில் வசித்து வந்த ஷாலினி தாக்கூர் (38) என்பவரை ரோஹித் (22) என்ற இளைஞர் பல மாதங்களாக பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி சாக்ரமெண்டோவில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே ஷாலினி தாக்கூர் இருந்தபோது, அங்கு வந்த ரோஹித் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும் இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் ரோஹித் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ரோஹித் இந்தியாவில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் குடியேறியதாகவும், ஷாலினி தாக்கூரை நீண்ட காலமாக பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டுக்கான முழுமையான காரணம் மற்றும் இருவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
