கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பன்றியை பிடிப்பதற்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில், 2-ம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறனின் மகள் நிஷாந்தனா (7), அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனிநபர் நிலத்திற்கு சிறுமி சென்றுள்ளார்.
அப்போது பன்றிகளை பிடிப்பதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருளை அவர் எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார்.
இதில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்துச் சிதறியது. சிறுமியின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
