சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் முதல் தள பால்கனி திடீரென இடிந்து விழுந்ததில், கீழே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அதிகாலை நேரத்தில் சம்பவம் நடைபெற்றதால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸுக்கு ஏழுகிணறு குட்டி மேஸ்திரி தெருவில் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் ஒரு கட்டிடம் சுமார் 40 ஆண்டுகள் பழமையானதாகும்.
அந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் 4 கடைகளும், முதல் தளத்தில் 4 குடியிருப்புகளும் அமைந்துள்ளன.
அதிகாலையில் பயங்கர சத்தம்
இந்த நிலையில் நேற்று அதிகாலை, கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்த பால்கனி திடீரென இடிந்து சாலையில் விழுந்தது. இடிபாடுகள் கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு ஆட்டோ மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 8 வாகனங்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்த ஏழுகிணறு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இடிபாடுகள் அகற்றம்
பின்னர் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு, சேதமடைந்த வாகனங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன.
சம்பவம் அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால், சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஏழுகிணறு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
