சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் லண்டன் சென்றுள்ளதாக பரவிய சமூக வலைதள வதந்திக்கு, அவரே நகைச்சுவையான பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ், தனது அடுத்தடுத்த திரைப்படப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
வைரலான விமான நிலைய புகைப்படம்
கடந்த சில நாட்களாக விமான நிலையம் ஒன்றில் கைப்பையுடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் லண்டனுக்குச் சென்றுள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவின.
லண்டனில் நடைபெறும் சில அரசியல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் அவரது பயணத்தை தொடர்புபடுத்தியும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
நக்கலாக பதிலடி
இந்த நிலையில், டொராண்டோ திரைப்பட விழாவில் தனது ‘டோரதி’ திரைப்படத்தின் திரையிடல் தொடர்பான பயணத்தில்தான் இருப்பதாக கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், “ஆமா கரெக்ட்… லண்டனில்தானே டொராண்டோ பிலிம் பெஸ்டிவல் நடக்குது!” என்று நக்கலாக பதிவிட்டு இணையத்தில் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவரது இந்தப் பதிவு ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. ஒரு வரி நக்கலிலேயே பெரிய வதந்தியை கீர்த்தி சுரேஷ் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
