ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்.
தற்போது அவர் ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபாஸுடன் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பிரபாஸ் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர் என்றும், பிறருக்கு உதவுவதில் எப்போதும் முன்வருபவர் என்றும் தான் ஏற்கனவே கேள்விப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடன் நேரடியாக பணியாற்றத் தொடங்கிய பிறகே, அந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் உண்மை என்பதை நேரில் உணர்ந்ததாக ஜிதின் குலாட்டி கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக நேரில் பார்த்தேன்
“கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபாஸுடன் படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவி செய்வதை நேரில் பார்த்துள்ளேன். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாஸின் எளிமை மட்டுமல்லாமல், அவரது வீட்டில் தயாரிக்கப்படும் உணவும் மிகவும் பிரபலமானது என்றும் ஜிதின் குலாட்டி கூறியுள்ளார்.
குறிப்பாக பிரபாஸ் வீட்டில் சமைக்கப்பட்ட மட்டனை தான் சுவைத்ததாகவும், அது தனது வாழ்க்கையில் சாப்பிட்ட சிறந்த மட்டன் உணவுகளில் ஒன்று என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
