டெல்லி: சர்வதேச வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல்சார் முற்றுகை உள்ளிட்ட அழுத்தங்களை கைவிட வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிசக்திப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல்வழிப் பாதையாக ஹார்முஸ் நீரிணை உள்ளது.
அமெரிக்காவுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதில் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அமெரிக்க அழுத்தத்திற்கு பதிலடி
டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தேசிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஹார்முஸ் நீரிணை விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அப்போது, அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஹார்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஆயுதங்களை கொண்டு வரலாம், கடல் வழிகளை முடக்கலாம் என்றால், அதற்கு ஈரான் பதிலளிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
