லண்டன்: சில்வர்ஸ்டோன் மிச்செலின் லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற அணி 3-வது இடத்தை பிடித்து அசத்தியது. போட்டியை தமிழக முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், இருவரும் சந்தித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் மிச்செலின் லீ மேன்ஸ் கப் கார் பந்தயம் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார், இந்தியாவின் முன்னணி வீரர்களான நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சில்வர்ஸ்டோன் ரவுண்ட் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அஜித்குமாரை சந்தித்த அவர், அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அஜித்துடன் விஜய் சந்திப்பு
முன்னதாக இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அஜித்தின் பந்தய காரின் அருகிலும், அதன் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அஜித்துக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் சர்வதேச மோட்டார் பந்தய களத்தில் ஒரே இடத்தில் சந்தித்த இந்த தருணங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இதற்கிடையே நடிகை திரிஷாவும் போட்டி நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்றார். அஜித்குமாரின் அழைப்பின் பேரில் அவர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
16-வது இடத்தில் இருந்து 3-வது இடம்
இரவு 9.30 மணியளவில் தொடங்கிய பந்தயம் இரவு 11.47 மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 50 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஏஎன்எஸ் மோட்டார் ஸ்போர்ட் அணி முதலிடத்தையும், ஆர்எஸ்ஜிபி அணி 2-வது இடத்தையும் பிடித்தன.
டீம் விராஜ் சார்பில் களம் இறங்கிய அஜித்குமார் அணி 3-வது இடத்தை கைப்பற்றியது. போட்டியின் தொடக்கத்தில் 16-வது இடத்தில் இருந்த அணி, பின்னர் படிப்படியாக முன்னேறி முன்னணி இடத்துக்கு வந்தது.
போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அஜித்குமாரின் கார் திடீரென விபத்தில் சிக்கியது. டிராக்கில் இருந்து விலகி பக்கவாட்டு பகுதிக்குச் சென்ற காரை மீட்புக்குழுவினர் உடனடியாக சீரமைத்தனர். அதன்பின் பந்தயம் தொடர்ந்து நடைபெற்றது.
அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்தது அவரது ரசிகர்கள் மற்றும் இந்திய மோட்டார் பந்தய ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
