புதுடெல்லி: டெல்லியில் தொடங்கிய 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றது.
பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு
மாநாட்டில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் உள்ளிட்டோரும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் என்கோசி ஒகோன்ஜோ-இவேலா, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
உலக பொருளாதாரம் முக்கிய விவாதம்
உலக பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், மேற்கு ஆசிய பதற்றம், ஹார்முஸ் நீரிணை பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் வர்த்தக, இறக்குமதி வரிக் கொள்கைகள் ஆகியவை உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் பொருளாதார ஒத்துழைப்பு, உலக வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
