சென்னை: திருவண்ணாமலை திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலுவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட எ.வ.வேலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எ.வ.வேலு தரப்பில் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி, அருள் ஆறுமுகம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலுவின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பாகவும் தமிழகத்தைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
