துபாய்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் வங்கதேசத்தினரின் விசாக்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, சுமார் 5,000 வங்கதேசத்தினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விடுமுறை உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த நாடுகளுக்குச் சென்றிருந்த சில தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசா புதுப்பித்தல், ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானதாக கருதப்படும் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
12 லட்சம் வங்கதேசத்தினர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 12 லட்சம் வங்கதேசத்தினர் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு அடுத்தபடியாக அங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கும் வெளிநாட்டவர் சமூகங்களில் வங்கதேசத்தினரும் இடம்பெற்றுள்ளனர்.
கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெருமளவில் வங்கதேசத்தினர் பணியாற்றி வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பெறுவதற்காக ஆள்சேர்ப்பு நிறுவனங்களுக்கு பெரும் தொகையை செலுத்தி, அதற்காக கடன் வாங்கி செல்லும் தொழிலாளர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
இவர்களின் வருமானத்தை நம்பியே சொந்த நாட்டில் உள்ள குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. எனவே விசா ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச அரசு ஐக்கிய அரபு அமீரக அரசுடன் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களின் நிலையை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
