சென்னை: ஜேசன் சஞ்சய் என்னிடம் ‘சிக்மா’ படத்தின் கதையை விவரித்த விதம், விஜய் அண்ணாவுடன் பேசுவது போலவும், அவருடன் இருந்தது போன்ற உணர்வையும் ஏற்படுத்தியது என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சுதீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து சென்னையில் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது தாய் சங்கீதா, தந்தை விஜய் மற்றும் சகோதரி திவ்யா சாஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தனது திரையுலகப் பயணத்தில் குடும்பத்தினர் அளித்த ஆதரவையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி பேசுகையில், ஜேசன் சஞ்சய் தன்னிடம் படத்தின் கதையை சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து விவரித்ததாகக் கூறினார்.
“அவர் கதை சொன்ன விதம், விஜய் அண்ணாவுடன் பேசுவது போலவும், அவருடன் இருந்த மாதிரியும் எனக்கு உணர்வு ஏற்பட்டது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் வெற்றி பெற வேண்டும். எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் அவர் கதாநாயகனாகவும் நடிக்க வேண்டும்” என்று சூரி கூறினார்.
மேலும், ‘சிக்மா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். சினிமாவில் முதல் படத்திலேயே இயக்குநராக களம் இறங்கும் ஜேசன் சஞ்சய்க்கு, படக்குழுவினரின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
