சென்னை: வெறும் ரூ.50 ஆயிரம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘கஸ்தூரி வீடு’ திரைப்படம், நடிகர் சமுத்திரக்கனி இணைந்த பிறகு பெரிய படமாக மாறியது என்று இயக்குநர் விஜய்.ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரென்டெக் ஃபிலிம், லயன் வி ஃபிலிம்ஸ் மற்றும் அன்னை சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை விஜய்.ஆர்.ஆனந்த் இயக்கியுள்ளார்.
அறிவியல் புனைகதை, ஃபேண்டஸி மற்றும் திகில் அம்சங்களை இணைத்து இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் விஜய்.ஆர்.ஆனந்த் ஏற்கனவே ‘தம்பி அர்ஜுனா’, ‘விளையாட்டு ஆரம்பம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படம் உருவான அனுபவத்தை பகிர்ந்த இயக்குநர், ஆரம்பத்தில் வெறும் ரூ.50 ஆயிரத்தை வைத்து படத்தை தொடங்கியதாக தெரிவித்தார்.
“சமுத்திரக்கனி சார் படத்திற்குள் வந்த பிறகு இது பெரிய படமாக மாறிவிட்டது. அவரை எப்படி அணுகுவது, அவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று ஆரம்பத்தில் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் மாற்றி அற்புதமாக நடித்துக் கொடுத்தார்” என்று கூறினார்.
மேலும், படத்தின் கதாநாயகனை பார்த்தபோது நடிகர் கார்த்திக்கின் இளமைக்கால தோற்றம் நினைவுக்கு வந்ததாகவும், அவர் திறமையான நடிகர் என்றும் இயக்குநர் பாராட்டினார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார். இது ஒரு நல்ல பயணம் என்று கூறிய அவர், சரியாக உழைத்தால் ஒரு கட்டத்தில் ‘மேஜிக்’ நிகழும் என்றும், அந்த மேஜிக்கில் அனைவரும் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
