சென்னை: கடந்த காலங்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி தொடரப்பட்ட 6 வழக்குகள் தொடர்பாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து, அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2002-03 முதல் 2009-10 வரையிலான 6 நிதியாண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா தரப்பில் ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் 2022-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களில் முன்வைக்கப்பட்ட அதே காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா தரப்பில் 6 மனுக்களும் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து அந்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனால், சம்பந்தப்பட்ட வருமான வரி வழக்குகளில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
