ஜப்பான்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் பிரிவில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஜப்பானில் நடைபெற்று வரும் பெண்கள் கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. நிஷின் நகரில் நடைபெற்ற 3-வது காலிறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் மலேசியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 63 ரன்கள் எடுத்தார்.
160 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசியா அணியால் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஜப்பான் அணி 19.5 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியின் ஸ்ரீசரணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
