சென்னை: தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் பொருட்படுத்துவதில்லை என்றும், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை வழங்குவதே தனது நோக்கம் என்றும் நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
மாடலிங் துறையின் மூலம் திரையுலகில் நுழைந்த திவ்யபாரதி, ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற அவர், தொடர்ந்து ‘கிங்ஸ்டன்’, ‘மதில் மேல் காதல்’, ‘ஆசை’, ‘லிங்கம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் திவ்யபாரதி, தற்போது 3 புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் அவர் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் திரைப்படம் தொடர்பான பதிவுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக அவரது நீளமான கூந்தல் மற்றும் மாறுபட்ட தோற்றம் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் மற்றும் விமர்சனங்கள் குறித்து திவ்யபாரதி பேசியுள்ளார்.
“சினிமா ஆசை இல்லாத நான் எதிர்பாராதவிதமாக சினிமாவுக்குள் வந்தேன். கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் அல்ல. அதனால் வாய்ப்புகள் வந்தவுடன் உடனடியாக ஒப்புக்கொள்வதில்லை.
என்னைப் பற்றிய விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. நான் யார் என்பது எனக்கும் கடவுளுக்கும் தெரியும். ரசிகர்களை மகிழ்வித்து, நல்ல படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். இடையில் வரும் விமர்சனங்கள் தேவையில்லாதவை” என்று தெரிவித்துள்ளார்.
