சென்னை: பெருமாள் வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படும் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது பல பக்தர்களின் வழக்கமாக உள்ளது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம்.
இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மற்றும் தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உலகளந்த பெருமாள், யதோத்தக்காரி பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், அழகிய சிங்கப்பெருமாள், பச்சைவண்ண பெருமாள், பவளவண்ண பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், திருமுக்கூடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் திரண்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் கோவிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி மாதம் முழுவதும் வரும் சனிக்கிழமைகளிலும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால், அடுத்தடுத்த வாரங்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
