கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை காலை பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களது வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நகராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
குறிப்பாக மாத ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும், குப்பை சேகரிப்பு மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு தேவையான கையுறைகள், முகக்கவசங்கள், கூடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக உளுந்தூர்பேட்டை நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் வழக்கமான குப்பை சேகரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன.
முக்கிய வீதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தேங்கத் தொடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தொடர்ந்து குப்பைகள் தேங்கினால் கொசுத்தொல்லை மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
