திருவனந்தபுரம்: நடப்பாண்டு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் சபரிமலைக்கு மாலை அணிவித்தும், விரதம் இருந்தும், இருமுடி கட்டியும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த 9 நாட்களில் 6 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் பிரசாந்த், “சபரிமலையில் மண்டல காலத்துக்காக கோயில் நடை திறக்கப்பட்ட 9 நாட்களில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 294 பேர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம். 23-ம் தேதி வரை பிரசாதம், அப்பம், அரவணை விற்பனை உட்பட மொத்த வருமானம் ரூ. 41 கோடியே 64 லட்சத்து 65 கிடைத்துள்ளது.
இது கூடுதல் வருமானம் கடந்த ஆண்டை விட ரூ. 13 கோடியே 13 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. பம்பை, எருமேலி, வண்டிப்பெரியார் ஆகிய ஸ்பாட் புக்கிங் மையங்களில், ஆதார் அடையாள அட்டையை மட்டும் பயன்படுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.