தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளி அம்மனும் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
முதலில் விநாயகர் தேர்
தேரோட்ட நாளான நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார்.
காலை 7 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளையும் சுற்றிவந்த தேர் காலை 7.35 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
அரோகரா முழக்கத்தில் பெரிய தேர்
அதனைத் தொடர்ந்து காலை 7.45 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப் பெருமான் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றிணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது பக்தர்கள் எழுப்பிய ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷம் விண்ணதிர எதிரொலித்தது.
பெரிய தேர் ரதவீதிகளைச் சுற்றி காலை 8.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
இன்று புஷ்ப சப்பர நிகழ்ச்சி
தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தம்பிரான் சுவாமிகள், மாவட்ட நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்புக்காக திருச்செந்தூர் டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
11-ம் திருவிழாவான இன்று இரவு சுவாமி, அம்மன் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வர உள்ளனர்.
நாளை நடைபெறும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் ஆவணித் திருவிழா நிறைவு பெறுகிறது.
