திருச்சி: கரூரை அடுத்த குளித்தலை அருகேயுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதன்படி, நடப்பாண்டு இந்த வழிபாட்டிற்காக நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். சுமார் 80 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பயணத்தை அவர்கள் மிகுந்த பக்தியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னோர்கள் காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தப் பழக்கம் இன்றும் மாறாமல் தொடர்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பயணத்தின் போது தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், விறகு மற்றும் பாத்திரங்களை மாட்டு வண்டிகளிலேயே எடுத்துச் செல்கின்றனர். வழியில் ஆங்காங்கே தோப்புகளில் தங்கி, சமைத்து உண்டு விட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்கின்றனர். இந்தப் பயணம் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
ஸ்ரீரங்கத்தை அடைந்ததும் காவிரி ஆற்றில் புனித நீராடி விட்டு, ரங்கநாதப் பெருமானைத் தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். இந்தப் புனிதப் பயணத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். நவீன வாகன வசதிகள் பெருகியுள்ள இந்தக் காலத்திலும், பழமை மாறாமல் மாட்டு வண்டிகளில் இந்தப் பயணத்தை மேற்கொள்வது தங்களது குலதெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கருதுவதாக மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.