தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திட்டையில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில்: குருபெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வரும் 26 ம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது.
தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
தஞ்சாவூரை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோயிலாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால், தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். இத்தகையை சிறப்பு பெற்ற கோயிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
அதன்படி இந்தாண்டு குருபகவான் மே 26-ம் தேதி காலை 11 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது.குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம்,துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவும், ஜூன் 3 -ம் தேதி ஒரு நாள் லட்சார்ச்சனையும், ஜூன் 5 -ம் தேதி முதல் 7 -ம் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.
குருபெயர்ச்சி விழாவையொட்டி கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாள் மற்றும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலர் சு.அசோக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.