சென்னை: மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூரியும், அவரது தாயும் பேசிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விழாவில் பேசிய சூரி, இன்று தனக்கு கிடைக்கும் விசில் மற்றும் கைதட்டல்களுக்கு காரணம் இயக்குநர் வெற்றிமாறன் என்று குறிப்பிட்டார்.
“எனது பயணத்துக்கு வெற்றிமாறனே காரணம்”
“இன்று எனக்கு கிடைக்கும் விசிலுக்கும், கைதட்டல்களுக்கும் காரணம் வெற்றிமாறன். அவை அனைத்தும் அவருக்குத்தான் போய் சேரும். நான் இதுவரை வந்திருப்பதற்கும், இனி போகப் போவதற்கும் வெற்றிமாறனே காரணம்.
எவ்வளவு புயல் வந்தாலும் நீங்கள் போட்ட விதை முளைத்துக் கொண்டே இருக்கிறது. இனியும் பலத்த காற்று அடிக்கலாம். ஆனால் என்ன நடந்தாலும் இந்த செடி ஒடிந்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என சூரி உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
மேலும், அனைத்து இயக்குநர்களுக்கும் இசையமைக்கும் இளையராஜாவைப் போல, ஜி.வி.பிரகாஷ் குமாரும் பல்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றி வருவதாக அவர் பாராட்டினார்.
“ரிஸ்க்கை மண்டாடியாக எடுத்திருக்கிறார்கள்”
‘மண்டாடி’ திரைப்படம் குறித்து பேசிய சூரி, “மண்டாடியில் ரிஸ்க் இல்லை; ரிஸ்க்கைத்தான் மண்டாடியாக எடுத்திருக்கிறார்கள் என்று நான் கூறினேன். இந்த படத்தை எடுப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது” என்றார்.
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் படப்பிடிப்புக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்ததாகவும், அவர்கள் ஒரு நாள் கூட வராமல் இருந்திருந்தால் இந்த படம் உருவாகியிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எங்கம்மா எனக்கு சாமி”
தான் இன்று இந்த இடத்தில் வந்து நிற்பதற்கு தனது குடும்பமே காரணம் என தெரிவித்த சூரி, விழாவுக்கு தனது தாயையும் அழைத்து வந்திருந்தார்.
“நாங்கள் காரில் இங்கு வந்தபோது, ஒரு காலத்தில் ரூ.300 வாடகை கொடுக்கக்கூட கையில் பணம் இல்லாமல் அழுதவனுக்கு இன்று பலர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள் என்று என் மகளிடம் அம்மா கூறினார். எங்கம்மா எனக்கு சாமி. அவருக்கு நான் நன்றி சொல்ல முடியாது. சாமிக்கு நன்றி சொல்ல முடியாது” என சூரி உருக்கமாக பேசினார்.
கண்ணீர் விட்ட சூரியின் தாய்
சூரியின் தாய் பேசும்போது, தனது மகன் இந்த அளவுக்கு உயர்வார் என்று தான் நினைத்துக்கூட பார்த்ததில்லை என தெரிவித்தார்.
ஒரு காலத்தில் தங்கள் ஊரில் விசேஷம் நடந்தபோது பலருக்கும் சாப்பாடு போட்டதாகவும், அந்த நேரத்தில் சூரி தனக்கு போன் செய்து சாப்பிட்டாயா என்று கேட்டதாகவும் கூறினார்.
“வயிறு ஃபுல்லாகும் வரை தண்ணீர் குடித்துவிட்டு படுத்துட்டேன் அம்மா என்று அவன் சொன்னான். அதை கேட்டு என் மனசே தாங்கவில்லை. அப்படி இருந்தவன் இன்று இந்த நிலைக்கு வந்திருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறி கண்ணீர் விட்டார்.
காமெடியனில் இருந்து ஹீரோவாக…
ஜூனியர் ஆர்டிஸ்டாக கூட்டத்தில் ஒருவராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சூரி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் சூரி கதாநாயகனாக அறிமுகமானபோது, காமெடியனை ஹீரோவாக்கியிருக்கிறாரே என பலரும் பேசினர். ஆனால் படம் வெளியான பிறகு சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டினர்.
தொடர்ந்து ‘விடுதலை 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த சூரி, தற்போது ‘மண்டாடி’ மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
