பாடகி மற்றும் தெரபிஸ்ட்டாக அறியப்படும் கெனிஷா பிரான்சிஸ், சமீபத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகனைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். ரவி மோகன் தனக்குத் தெரபி பெறும் நபராக இருப்பதோடு, தன்னுடைய புதிய இசை வீடியோ “அன்றும் இன்றும்” பாடலிலும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோவின் இறுதிக் காட்சியில் அவர் தோன்றியது ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியடையச் செய்தது. அந்தக் காட்சியை மட்டும் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக வீடியோவை ரீபீட் மோடில் பார்த்துள்ளனர் ரசிகர்கள்.

ஒரு பெண் தனது சோல் மேட்டைத் தேடும் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட பாடலாக “அன்றும் இன்றும்” உருவாகியுள்ளது என கெனிஷா தெரிவித்துள்ளார். அதில் ரவி மோகனின் தோற்றம் ஒரு வரப்பிரசாதமாக இருந்ததாகவும், அவரின் ஆதரவை தொடர்ந்து பாராட்டியுள்ளார். “அவர் ரொம்ப நல்லவர், ஸ்வீட், சார்மிங்,” என்று புகழ்ந்த கெனிஷா, ரவி வந்ததால் இந்த பாடல் 100 மடங்கு சிறப்பாக மாறிவிட்டது என மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
தனது இசை பயணத்தைப் பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார். “என் பாடல்கள் அனைத்தும் என் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. மேடையில் பாடும் போதும், வீடியோவுக்காக பாடும் போதும் கவனம் முழுவதும் அந்த பாடலில் மட்டுமே இருக்கும்,” என கூறிய கெனிஷா, கார்த்திக், சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்வேதா மோகனின் தீவிர ரசிகையெனவும் தெரிவித்தார். மேலும் ஹரிஹரன், ஏ.ஆர்.ரஹ்மான், சலிம்-சுல்தான் ஆகியோரின் பாடல்கள் எப்போதுமே தரமானவையாகவே இருக்கும் என்றும் சொன்னார்.
ரவி மோகனின் விவாகரத்து விவகாரம் தொடர்பாக தெரபி தேவைப்பட்டபோது, கெனிஷா அவருக்கு சிகிச்சை அளித்ததையும், அதற்கு பதிலாக ரவி பாடல் வீடியோவில் தோன்றி உதவியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனைத் தொடர்ந்து கெனிஷா மீது சிலர் விமர்சனம் செய்து, அவரை சமூகவலைதளங்களில் கேலி செய்தனர். இதற்குப் பதிலளிக்க கெனிஷா சட்டவழியில் நடவடிக்கை எடுத்து, அவதூறு கருத்துகளை நீக்க வேண்டும் என வக்கீல் மூலம் எச்சரிக்கை வழங்கியுள்ளார்.