மும்பை: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய விளையாட்டாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற்றது.
இதில் பேசிய ஜெய்ஷா, “இது மகளிர் கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கியமான மைல்கல் தருணம். இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் மிகவும் விறுவிறுப்பான மற்றும் லட்சியமிக்க தொடராக இது அமையும்” என்றார்.
மேலும், உலகளாவிய அளவில் அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட்டை உருவாக்கும் ஐசிசியின் நோக்கத்தின் வெளிப்பாடாக இந்த தொடர் அமையும் என்றும் குறிப்பிட்டார். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் களமிறங்க உள்ளது.
நடப்பு சாம்பியனாக நியூசிலாந்து மகளிர் அணி களமிறங்குகிறது. அதே நேரத்தில், 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா மகளிர் அணியும் மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.