பெங்களூர்: பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண், ரேஷ்மா என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக அவர் முறையாக வட்டி செலுத்தவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே, ரேஷ்மாவுக்கு அறிமுகமான நஷ்ரத் என்பவரிடமும் சகுந்தலா ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வகையில் வாரந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக சமீப காலமாக அவரால் பணத்தைச் செலுத்த முடியவில்லை.
இதையடுத்து நஷ்ரத்தின் செல்போன் எண்ணை சகுந்தலா முடக்கியதுடன், வசித்து வந்த வீட்டையும் காலி செய்து வேறு இடத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வேலை மற்றும் பணம் தருவதாகக் கூறி நஷ்ரத் அழைத்ததை நம்பி சகுந்தலா அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு ரேஷ்மா, அவரது கணவர் சுஹைல் உள்ளிட்டோர் சகுந்தலாவை தாக்கியதாகவும், பின்னர் ஆட்டோவில் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து தாக்கியதுடன், அவரது ஆடைகளை அகற்றி வீடியோ பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. வட்டியுடன் சேர்த்து ரூ.11 லட்சம் வழங்காவிட்டால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும், ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று வெற்றுத் தாள்களிலும் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சகுந்தலாவின் தாயார் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து சகுந்தலாவை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஷ்மா உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
