மும்பை: கல்லூரி மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி 75 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அதன் மூலம் சுமார் ரூ.50 கோடி சைபர் மோசடி செய்த கும்பலை மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைபர் மோசடி கும்பல்கள், தாங்கள் மோசடி செய்யும் பணத்தை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கில் பெறாமல், அப்பாவிகளின் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகளைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று உடனடியாக வேறு கணக்குகளுக்கு மாற்றுவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மும்பை, கல்யாண் மற்றும் நவி மும்பை பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் 5 மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி 75 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகள் மூலம் கடந்த ஜனவரி 10 முதல் மார்ச் 5 வரை பொதுமக்களிடம் சுமார் ரூ.50 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் வங்கி அலுவலகப் பணியாளர் ரூபேஷ் தாக்குர் (38), வணிகப் பிரிவு ஊழியர் யோகேஷ் வடகர் (37), சமூக வலைதளங்களில் பிரபலமான சாஹில் ஜாவேத் கேப்டன் (22), டெலிவரி ஊழியர் பிரசாத் ராய்கர் (26), சிவம் துபே (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாக்கிநாக்கா காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், யாஷ் பரத்கர் (20), ஆனந்த் யாதவ் (20), அபிஷேக் திவாரி (21), சக்சம் பட் (19), ஹர்தீப் திவாரி (21) ஆகிய 5 மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றதாக தெரியவந்தது.
கடந்த ஜனவரி 5-ம் தேதி அவர்களை குர்லா ரயில் நிலையத்தில் சந்தித்த கேப்டன், புதிய சிம் கார்டுகளைப் பெற உதவியதுடன், ஊதியம் பெறுவதற்காக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறி சாக்கிநாக்காவில் உள்ள ஒரு ஏஜென்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பயோமெட்ரிக் மூலம் மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாகியும் வேலை வழங்கப்படாததால் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தங்களது ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என அச்சமடைந்த மாணவர்கள், தங்கள் பெயரில் வேறு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளனவா என வங்கிகளில் சோதனை செய்தனர். அப்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மட்டும் தங்கள் பெயரில் 11 கணக்குகள் தொடங்கப்பட்டு, அவை டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பதிவான சைபர் குற்றப் புகார்களைத் தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தாங்கள் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் தாக்கல் செய்த 400 பக்க குற்றப்பத்திரிகையில், 75 வங்கிக் கணக்குகள் தேசிய சைபர் குற்றப்புகார் இணையதளத்தில் பதிவான வழக்குகளுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்குத் தெரியாமல் கணக்குகள் தொடங்கப்பட்ட பிறகு வழங்கப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்ட விவரங்களை ரூபேஷ் தாக்குர் பெற்றுச் சென்று, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியின் முக்கிய குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
