இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் சமீபத்தில் பதட்டத்தை சந்தித்திருந்தாலும், தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 25% வரியை விதித்தது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை என்ற காரணத்தால், அந்நாட்டு அதிபர் டிரம்ப் மொத்த வரியை 50% ஆக உயர்த்தியிருந்தார். இதனால் பேச்சுவார்த்தை தற்காலிகமாக தடைபட்டது.

ஆனால் பின்னர், தடையை நீக்கவும், வர்த்தக உறவை சுமூகமாக்கவும் அமெரிக்கா முன்வந்தது. இதன்படி, அமெரிக்க பிரதிநிதி பிரன்டன் லின்ச் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வந்து, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சக அதிகாரிகளுடன் சந்தித்து கலந்துரையாடினர்.
ஏறத்தாழ 7 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், விரைந்து தீர்வு காணும் வகையில் இரு தரப்பும் உறுதி பெற்றுள்ளன. சேதாரமில்லாமல் சுமூகமான ஒப்பந்தம் கையெழுத்திடவும், அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்த பேச்சுவார்த்தை நடத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.