சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் வேளாண்மை பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் பழைய திட்டங்களே என திமுகவும் அதிமுகவும் விமர்சித்து வருகின்றன. நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை மீண்டும் செயல்படுத்துவது அரசின் கடமையாகும். செயல்படாத திட்டங்களை மாற்றி அமைப்பதும் நிர்வாகத்தின் இயல்பான நடைமுறையாகும். மக்களுக்கு பயனளிக்கும் அனைத்து திட்டங்களும் விரைவாக அமல்படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், முந்தைய ஆட்சியினர் பல துறைகளை நெருக்கடியான சூழலில் விட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கும் பணியில் முதலமைச்சர் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், நிதிநிலை சீரான பிறகு தேர்தல் வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு பதிலளித்த அவர், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறினார்.
மேலும், திமுகவும் அதிமுகவும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்றும், தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்களை அழைத்து பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் கூட்டணிக் கட்சிகளுடன் மட்டுமே ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
