கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் எல்லை பாதுகாப்பு படை, மகாராஷ்டிரா மற்றும் தமிழக காவல்துறை 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கே ஆர் மருத்துவமனை வரை எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வருகின்ற 23ம் தேதி நடைபெற்றவுள்ள சட்டமன்ற தேர்தலில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வாக்குப்பதிவு செய்ய காவல் துறையினரின் கொடி அணிவிப்பு ஊர்வலம் நடைபெற்றது.
பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிபாளையத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பை ஏ எஸ் பி செல்வி இன்பா, பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
யுனைடெட் கல்லூரி மற்றும் ஏ வி பி பள்ளி பேண்டு வாத்திய மாணவர்கள் இசையுடன் தொடங்கிய கொடி அணிவகுப்பு ஐந்து முக்கு, அகிலா பேக்கரி, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம், பெரியநாயக்கன்பாளையம் ஜங்ஷன் வழியாக கே ஆர் மருத்துவமனையில் முடிவடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள், உதவி ஆய்வாளர்கள் உள்பட எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.