தஞ்சாவூர்: பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் இயற்கை விவசாயி அரு. சீர் தங்கராசு, தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கட்சித் தளங்களின் ஆதரவின்றி, நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெறும் நோக்கில் அவர் மேற்கொள்ளும் இந்தப் பிரச்சார முறை தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது.
தொகுதியின் கிராமங்கள் முதல் நகரப் பகுதிகள் வரை வீடு தோறும் சென்று வாக்காளர்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள், குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி குறைபாடு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை போன்ற அடிப்படை சிக்கல்களை கேட்டறிந்து வருகிறார். பொதுமக்களுடன் நேரடியாக உரையாடி, “நான் உங்கள் ஒருவராகவே இந்த தேர்தலில் நிற்கிறேன்; உங்கள் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்க விரும்புகிறேன்” எனக் கூறி ஆதரவை நாடுகிறார்.
இவ்வாறு பாபநாசம் ொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகிறார். பிரச்சாரத்தில் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தான் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்பதை உறுதி ொழியாக தெரிவித்து வருகிறார்.
பெரிய கட்சிகளின் வளமும், அமைப்பும் இல்லாத நிலையிலும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அரு. சீர் தங்கராசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், “தொகுதியின் முழுமையான முன்னேற்றம், நீடித்த குடிநீர் திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மேம்பாடு” ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக முன்வைத்துள்ளார். மேலும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நேரடியாக சட்டமன்றத்தில் முன்வைத்து தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
பாபநாசம் தொகுதியில் அரு. சீர் தங்கராசு மேற்கொள்ளும் இந்த நேரடி மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட பிரச்சாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.