கோபி: த.வெ.க. சார்பில் வருகிற 6-ந் தேதி கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிக்க உள்ளேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் புதிய அலுவலகத்தை நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் செங்கோடையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: த.வெ.க.தலைவர் விஜய்யின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அனைத்து இல்லங்களிலும் த.வெ.க.வின் குரல் ஒலித்துகொண்டு இருக்கிறது.
3-ம் ஆண்டு விழாவில் விஜய் சிறப்பாக உரையாற்றினார். அவருடைய இலக்கு தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆண்டு உள்ளன. இந்த முறை மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து 3 லட்சம் பேர் த.வெ.க.வுக்கு வாக்கு அளிக்க உள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள்.
ராசிபுரம் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டத்தில் அவர்களே த.வெ.க கொடியை பிடித்து விட்டு த.வெ.க.வினர் வந்தனர் என தவறாக கூறியுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளிக்க உள்ளேன்.
முருகன் பக்தி பாடலை பாடி வேல்முருகன் ஆட கூறியதால் விஜய் நடனம் ஆடினார். அதை விமர்சனம் செய்கிறார்கள். நயினார் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி சலங்கை கட்டி ஆடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிவுக்கு பிறகு யார் எங்களை கண்டு அச்சப்படுகிறார்கள். யாருக்கு நாங்கள் போட்டி. யாருடைய வாக்கு வங்கி சரிகிறது என்பது தெரியவரும் என்றார்.