கோத்தகிரி: மக்களுக்கான ஆட்சியை வழங்கிக்கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருக்கிறது என்று சசிகலா தெரிவித்தார்.
கொடநாடு எஸ்டேட்டுக்கு, சசிகலா நேற்று மாலை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது:
மக்களுக்கான ஆட்சியை வழங்கிக்கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதன் காரணமாக கடந்த 2024 ஜனவரி மாதம் பூமி பூஜை செய்தோம். மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி கோரினோம்.
ஆனால், ஏதேதோ காரணங்களை சொல்லி ஜெயலலிதா உருவச்சிலை மற்றும் மணிமண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தனியாருக்கு சொந்தமான இடங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இதுபோன்ற மணி மண்டபங்களை அமைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். ஆனால் எங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் நிராகரிப்பு செய்து அனுப்பி இருக்கிறது.
ஆனால், அனைத்து தடைகளையும் மீறி நிச்சயமாக இங்கு அம்மாவுக்கான மணிமண்டபத்தை எழுப்புவோம். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஜெயலலிதா ஆட்சியை நான் கொண்டு வருவேன். இவ்வாறு சசிகலா கூறினார்.