சென்னை: தமிழகத்தில் சேவல் சண்டைப் போட்டிகளுக்கு முழுமையாகத் தடை விதித்து காவல்துறை டி.ஜி.பி. பிறப்பித்த சுற்றறிக்கைக்கு எதிரான வழக்கில், டி.ஜி.பி.க்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோயில் திருவிழாக்களின் போது சேவல் சண்டைப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தமிழக கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் காலம் காலமாக நடைபெற்று வருவதாகவும், காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்படுவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிருக வதை தடுப்புச் சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே டி.ஜி.பி. சுற்றறிக்கை வெளியிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, “மாநிலத்தில் சேவல் சண்டைக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், காவல்துறைக்கு சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது உள்ளிட்ட பல முக்கிய பணிகள் இருக்கும்போது, ஆடு சண்டை, சேவல் சண்டை நடப்பதை கண்காணிப்பதுதான் முதன்மைப் பணியா என்றும் அதிருப்தி தெரிவித்தார்.
வழக்கு தொடர்பாக காவல்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
