தஞ்சாவூர்: தஞ்சை அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டுப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் உறுதிமொழி வாசித்துத் தொடக்கி வைத்தனர்.
உறுதி மொழியை மாடு பிடி வீரர்கள் வாசித்து ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 700 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்து விடப்பட்டன. காளைகளைப் பிடிக்க மொத்தம் 40 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாகக் களமிறக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி இளம் காளையர்கள் பார்வையாளர்களிடம் பாராட்டுக்களை பெற்றனர். மாடு பிடிக்கும் போது வீரர்கள் தடுமாறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில் வாடிவாசலிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்குத் தேங்காய் நார் போடப்பட்டிருந்தது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் அண்டா, பேன் பரிசுகளாக வழங்கப்பட்டன. இதேபோல் பிடிபடாத மாடுகளுக்கான பரிசுகள் மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, மாடு பிடி வீரர்களைச் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல் நலம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு தகுதியானவர்களை மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.
இதேபோல, மாடுகளைக் கால்நடைப் பராமரிப்புத் துறையினர் பரிசோதனை செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் உத்தரவின் பேரில் வல்லம் டி.எஸ்.பி., காயத்ரி தலைமையில் 400-க்கும் அதிகமான போலீசார் செய்திருந்தனர்.