பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகரின் மிக முக்கியச் சாலையான சேதுசாலையில், ரயில்வே கேட் அருகே, தார் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், கட்டுமாவடி, பெருமகளூர் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைக்குச் செல்லும் பிரதான வழியாக இந்தச் சேதுசாலை உள்ளது. பள்ளிகள், கல்லூரி பேருந்துகள், பொதுப்போக்குவரத்து பேருந்துகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இவ்வழியாகச் சென்று வருகின்றன. இந்நிலையில், ரயில்வே கேட் அருகே தார் முழுமையாகப் பெயர்ந்து, பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் இந்தப் பள்ளங்கள் சரியாகத் தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். ரயில்வே கேட் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும்போது, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இப்பள்ளங்களைக் கடக்க முயல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலை சிதிலமடைந்துள்ளதால் அந்தப் பகுதி முழுவதும் தூசி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் அருகே உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளுக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பள்ளத்தின் ஆழம் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட இந்தப் பகுதியைக் கடக்க நீண்ட நேரம் ஆகிறது,” என சமூக ஆர்வலர் நா.வெங்கடேசன் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனடியாக தலையிட்டு, ரயில்வே கேட் அருகே சேதமடைந்த சாலையைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.