சென்னை: அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படுவதை உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம், அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் கலாசார உணர்வின் வெளிப்பாடாகும் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தும் மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்யவும் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய மற்றும் மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.