சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க கோரிய வழக்கில் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரிடம், “இதுபோன்ற பல வழக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடருகிறீர்கள். இந்த வழக்கில் நம்பகத்தன்மை இல்லாததால் கடும் அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 44,000 கோவில்களுக்கு 44,000 பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வீர்களா?” என்று நீதிபதிகள் கேட்டனர். அப்போது, கோவில் நிலங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுதாரர் இந்த மனுவை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கு, மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பிளாக் மெயில் நடவடிக்கை என்றும், வரம்புக்குள் நீதிமன்றத்தை அணுக வேண்டும், இல்லையெனில் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
பின்னர், அரசு இயந்திரத்தின் தவறால் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.