பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து, மே மாத இறுதியில் இருந்தே தக்காளி சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து, ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து, தக்காளி நல்ல விளைச்சல் தர துவங்கியுள்ளது.
இதனால் பல கிராமங்களில் இம்மாதம் முதல் தக்காளி அறுவடை துவங்கியுள்ளது. மேலும், கடந்த சில வாரங்களாக கிணத்துக்கடவு மற்றும் உடுமலை, தளி, குடிமங்கலத்தில் இருந்து பொள்ளாச்சி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை சரிந்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி, தரத்திற்கு ஏற்ப, 18 ரூபாய் முதல், 22 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று பொள்ளாச்சி மார்க்கெட்டில் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை குறைந்த விலையில் விற்கப்பட்டது.
சில நாட்களில் தக்காளி வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் விலை தேக்கமடைந்தது. வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்தால் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.