ஹார்முஸ்: ஹார்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்டு ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், செங்கடல் கடல் வழித்தடத்திலும் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஏமன் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முன்னேற்றம், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்களை ஹவுதி அமைப்பு தொடர்ந்து குறிவைத்து தாக்கி வரும் நிலையில், சவுதி அரேபியா எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. முக்கிய கடல்வழியான பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள மோகா துறைமுகத்தை ஹவுதி அமைப்பு கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சம்
இதன் காரணமாக பாப் அல்-மாண்டெப் வழியாக நடைபெறும் சர்வதேச கடல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்காக சவுதி அரேபியா கடந்த 1980-ம் ஆண்டில் கிழக்கு-மேற்கு எண்ணெய்க் குழாய் அமைப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழாய் வழியாக கச்சா எண்ணெயை மேற்குக் கடற்கரை பகுதிகளுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது சவுதி அரேபியா.
டிரோன் தாக்குதல் குற்றச்சாட்டு
இதற்கிடையே, இந்த முக்கிய எண்ணெய்க் குழாயை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. ஈராக்கில் இருந்து டிரோன்கள் ஏவப்பட்டதாகவும் சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக முக்கிய பைப்லைனை தற்காலிகமாக மூடுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஏற்கனவே ஹார்முஸ் வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஈராக்கிலிருந்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹவுதி அமைப்பின் இந்த முன்னேற்றம், ஈரானுக்கு அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய மோதலில் புதிய மூலோபாய வாய்ப்பை உருவாக்கக்கூடும் என்று அரசியல் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
