வாஷிங்டன்: காசாவில் இருந்து அதிகளவு அகதிகளை ஏற்று கொள்ள வேண்டும் என்று அரபு நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் லாஸ் வேகாசில் இருந்து புளோரிடாவுக்கு அமெரிக்க விமான படை விமானத்தில் நேற்று முன்தினம் சென்ற போது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறுகையில்,‘‘ காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன அகதிகளை ஜோர்டான், எகிப்து மற்றும் இதர அரபு நாடுகள் அதிகளவு ஏற்று கொள்ள வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட காசாவின் குடியிருப்புகள், கட்டிடங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. அங்குள்ளவர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்று கொள்ள வேண்டும்.இது தற்காலிகமானதாக இருக்கலாம்.அல்லது நீண்ட காலத்துக்கு இருக்கலாம். ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடன் பேசினேன். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியுடனும் இது பற்றி பேச இருக்கிறேன். இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட பெரிய வெடிகுண்டுகளை சப்ளை செய்வதற்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது’’ என்றார்.