கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, நடிகர் விஜய் குறித்து சீமான் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். “விஜய் வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, ஆனால் அவர் இதயத்தில் வலியோ காயமோ இல்லை, சினிமா வசனம் போல் பேசி விட்டார்” என சீமான் கூறினார். மேலும், கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்றால், மருத்துவமனையில் உள்ளோருக்கு ஏன் காயம் இல்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த பேச்சுகளை கிண்டல் செய்து சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன், சீமான் விஜய் குறித்து இதுவரை கூறிய மற்றும் இனிமேல் கூறக்கூடிய கருத்துகளை லிஸ்ட் போட்டு பதிவு செய்துள்ளார். “அன்று விஜய் என் தம்பி, பச்சைத் தமிழன் என்று கூறியவர், இன்று சினிமா வசனம் பேசுகிறார் விஜய் என்கிறார். நாளை என் தம்பி பேசினது சரி தான் என்கிறார், நாளை மறுநாள் அரசியல் உனக்கு எதுக்கு எனக் கேட்கிறார்” என்று அவர் எழுதியுள்ளார்.
மேலும், “அடுத்த வாரம் திராவிட கட்சிகள்தான் ஆள வேண்டும் என்று சொல்வார், அடுத்த மாதம் அரசியல் உன் வேலை இல்லை எனக் கூறுவார். ஜனவரி 2026-ல் மாற்று அரசியல் தம்பிகள், தங்கைகள் முன்னெடுப்பார்கள், நான் கூட இருப்பேன் எனச் சொல்வார். மே 2026-ல் அரசியலுக்கு போக வேண்டாம், நடிப்பு வேலையை மட்டும் பாருங்கள் எனக் கூறுவார்” என ப்ளூசட்டை மாறன் சீமானின் கருத்து மாறுபாடுகளை சாடியுள்ளார்.
இந்த பதிவால், சீமான் தனது பேச்சில் எவ்வாறு திசை மாறுகிறார் என்பதையும், விஜயின் அரசியல் வருகையைச் சுற்றி உருவாகும் சர்ச்சைகளையும் வெளிப்படுத்த முயன்றதாக தெரிகிறது. இதே நேரத்தில், விஜயின் அரசியல் பாதையை எதிர்காலத்தில் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பல தரப்பில் விவாதம் எழுந்து வருகிறது.