சென்னை: தமிழகத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில் தவெகவில் இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளதால் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளது.
17-வது சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல், அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டன. ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவலின்படி, இடைத்தேர்தல் தேதி அடுத்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். “ராஜினாமா செய்ததற்கான காரணம் என்ன? உங்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது?” என 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.