சென்னை: மார்ச் 28 ஆம் தேதி ஐபிஎல் 2026 தொடங்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற ஐபிஎல் தொடர் விளங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 18 ஆவது ஐபில் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் என்றும் இறுதிப் போட்டி மே 31 ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், போட்டிக்கான தேதிகளை முறையாக அங்கீகரிக்க அடுத்த வாரம் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் தொடக்கப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கான இடம் உள்ளிட்ட அட்டவணையை இந்தக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஐபிஎல் தொடரின் தொடக்க தேதி இப்போது இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்-லின் முக்கிய அணிகளின் மாநிலங்களான மேற்கு வங்கம் (கொல்கத்தா அணி) மற்றும் தமிழ்நாடு (சென்னை அணி) பகுதிகளில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், 2026 சீசனுக்கான அட்டவணை அறிவிப்பு தாமதமாகியுள்ளது.