சென்னை: டெல்லியில் ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ள இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளது. காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தியே இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜூன் 8-ம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ளது.
இந்த சூழலில், இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 8-ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாகவும், அதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய நிர்வாகிகள், காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணியை திமுக தலைமையில் உருவாக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், காங்கிரஸ் இழைத்த துரோகத்தால் திமுகவினர் மனக்காயம் அடைந்துள்ளதாகவும், அதனால் இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.