சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை அவரது இல்லத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது திருச்சி மாவட்ட வளர்ச்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்குவது, திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசியதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விஜய் முதல்வரான பிறகு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் துரை வைகோ, விஜய் குறித்து நேர்மறையான கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார்.
மேலும், தவெகவும் ஒரு திராவிட இயக்கம்தான் என்றும் அவர் கூறியிருந்தார். மதிமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என்றும், இனி மற்ற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விரைவில் மதிமுக தவெக பக்கம் சாயும் என்ற அரசியல் பேச்சுகள் நிலவி வரும் சூழலில், துரை வைகோ முதல்வர் விஜய்யை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.